Monday, November 21, 2011

புத்தெழுச்சியுடன் நிவாவின் 6வது கூட்டம் – Live Report

தியாகத்திருநாள் விடுமுறைகளுக்கு பின் கூடும் கூட்டம் என்பதால் குளிர் காலத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஆரம்பம் முன்னமேயே செய்யப்பட்டிருந்தும் மக்கள் சரியான நேரத்துக்கு வருகை தந்தனர். மஃரிப் தொழுகைக்கு பின் சரியாக மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி மன்னு ஸல்வா உணவக கீழ் தளத்தில் ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்னமேயே பொருளாளர் ஹலீல் தலைமையில் சகோதரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அழகுற செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக உறுப்பினர் அயூப் கான் திருமறையின் வசனங்களை ஓதி ஆரம்பம் செய்தார். பின்பு நிவாவின் செய்தி தொடர்பாளர் லால் கான் அனைவரையும் தன் கொஞ்சும் தமிழில் வரவேற்றார். வரவேற்புரைக்கு அடுத்து சிறப்புரையாக “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” எனும் தலைப்பில் சங்கத்தின் துடிப்பு மிக்க செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் உரையாற்றினார்.
தூக்கு தண்டனை குறித்த சென்ற அமர்வின் ஆவேச உரைக்கு மாற்றமாக மரணத்தை குறித்த நெகிழ்வான உரையாக அமைந்தது. வெறும் மரணத்தின் போது மட்டும் சொல்லப்படும் சொல் அல்ல, ஒரு முஸ்லீம் தன் வாழ்வில் ஏற்படும் துயரம், சோதனை, கஷ்டம் அனைத்திலும் பயன்படுத்த வேண்டிய சொல் என்று கூறி ஆரம்பித்தவர் இச்சொல்லின் பொருளை உணர்ந்தால் நம் செல்வம், குடும்பம், திறமைகள், ஏன் நம் உயிர் உள்ளிட்ட எதுவும் நம்முடையது அல்ல என்ற உண்மை புரியும் என்றார்.
”இந்த உமர் இறந்து விட்டார் என்று சொல்லப்படும் போது உமர் உயிரோடு இருக்க மாட்டான்” என்ற உமர் (ரலி) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி மரணம் நமக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு இருக்குமானால் எப்படி நம்மால் உறவுகளை வெட்டி கொண்டு பேசாமல் இருக்க முடிகிறது ?, வரதட்சணை வாங்கி கொண்டு வளப்படுத்தி கொள்ள முடிகிறது?, வட்டி லோன் வாங்கியாவது வீடு கட்ட சொல்கிறது ?, சமுதாயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகளை அரசியல் லாபங்களுக்காக அரசியல்வாதிகளிடம் அடகு வைக்க முடிகிறது ? என்று எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு உண்மையில் யாரிடமும் பதில் இல்லை என்றே சொல்லலாம்.
அடுத்த படியாக ஒரு முஸ்லீமுக்கு சோதனைகள் வழமையானதே என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்விலிருந்தே அவர்கள் தனிமைப்படுத்தப்படல், மகனை பாலையில் விட்டு வருதல், குர்பானி கொடுக்க முன்வருதல் போன்ற உதாரணங்களை சொல்லி விளக்கினார். குர்பானி என்பது வெறும் பணம் அனுப்பி சடங்காக ஆடு வெட்டுவது அல்ல, தேவைப்பட்டால் தன்னையும் இம்மார்க்கத்தை நிலைநாட்ட அறுப்பேன் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சி வந்தவர்கள் இனி மேல் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எனும் வார்த்தையை கேட்கும் போதெல்லாம் நிச்சயமாக இவை அனைத்தும் நினைவுக்கு வரும் என்று நம்பலாம்.
மார்க்க சொற்பொழிவை தொடர்ந்து நிவாவின் மக்கள் தொடர்பாளர் ஹாஜா சாதிக் நிவாவின் உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கல்வி, வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனை தேவைப்படும் போது தொடர்பு கொள்ள பொறியாளர் ஃபெரோஸ்கான் தலைமையில் ஆலோசனை குழு உறுப்பினர் நாசர் மற்றும் செய்தி தொடர்பாளர் லால் கானை உள்ளடக்கிய கல்வி வேலைவாய்ப்பு ஆலோசனை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தாயகம் செல்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்காக பொருளாளர் ஹலீல் ரஹ்மானையும் பிற ஆலோசனைகளுக்காக தலைவர் மன்சூரையும் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொண்டார். (முழுமையான விபரங்கள் அடங்கிய நோட்டீஸ் விரைவில் இத்தளத்தில் பதிவாகும் இன்ஷா அல்லாஹ்)
பின்பு நிவாவின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். நிவாவின் மூலம் வட்டியில்லா கடன் பெற்றவர்கள் சரியாக தங்கள் பணத்தை திரும்ப செலுத்துவதாக குறிப்பிட்டார். இவ்விழாவில் முதல்முறையாக 30 நிமிடங்கள் கேள்வி பதிலுக்காகவே ஒதுக்கப்பட்டது. செத்த கழுதை சம்பந்தமான ஹதீஸை மேற்கோள் காட்டி உறுப்பினர்கள் அனைத்து வகையான ஆதங்கத்தையும் இங்கேயே கொட்டவும் என்று செயலாளர் ஃபெரோஸ்கான் வைத்த கோரிக்கையை தொடர்ந்து அனைவரும் பல கேள்விகளை கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதிலளித்தனர். முக்கியமாக ஊரில் உள்ள எவ்வமைப்புக்கும் நிவா முழுக்க முழுக்க ஆதரவோ எதிர்ப்போ இல்லை என்றும் நன்மையான விஷயங்களை யார் செய்தாலும் தன் சக்திக்குட்பட்டு ஆதரிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் இது வரை நிவா குவைத்தில் மட்டுமே சேவை செய்ததாகவும் எதிர்காலத்தில் ஊரின் வளர்ச்சிக்கும் பாடுபடும் என்று அறிவிக்கப்பட்டது. நமதூருக்கு திட்டங்களை விரிவாக்கும் போது நிவாவின் நெல்லிக்குப்பம் நிர்வாகிகள் விரிவுபடுத்தப்படுவர் என்றும் விளக்கப்பட்டது.
பைத்துல்மால் பற்றிய கேள்விக்கு நிவாவின் எதிர்கால இரு திட்டங்களுள் முக்கிய திட்டம் என்றும் (இன்னொன்று மாதிரி பள்ளி கூடம்) நிவாவால் மாத்திரம் சாதிப்பது கடினம் என்றும் இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களில் சவூதி, துபாய் மற்றும் பிற நாடுகளிலுள்ள நெல்லிக்குப்பம் ஜமாத்துகளை ஒன்றிணைத்து அதன் மூலம் இத்திட்டம் நிறைவேற்ற பாடுபடும் என்றும் சொல்லப்பட்டது. மேலும் உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்பட்டது. இது வரை நிவாவின் எந்நிகழ்வுக்கும் வராதவர்கள் ஒரு தடவையாது வந்து நிவாவின் செயல்பாடுகளை பார்த்தால் கண்டிப்பாக வருவார்கள் என்றும் அதற்காக நிகழ்ச்சிகளுக்கு அவசியம் வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பின் உறுப்பினர் அப்பாஸ் அனைவருக்கும் நன்றி சொன்னார். துஆவுக்கு பின் அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை ஆலோசனை குழு உறுப்பினர் அஷ்ரப் அலியும் தலைவர் மன்சூரும் அழகுற செய்தனர். நிறைய புது உறுப்பினர்கள் வந்த இந்நிகழ்வு உண்மையில் முதல் அறிமுக விழாவுக்கு அடுத்து வெகு கலகலப்பாகவும் சிறப்பாகவும் இருந்தது என்றால் அது மிகையல்ல. இன்ஷா அல்லாஹ் அடுத்த நிகழ்வு ஜனவரி 13 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Tuesday, November 15, 2011

நவம்பர் 18 நிவா நிகழ்ச்சி நிரல்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை (18.11.2011) மாலை 5.00 மணிக்கு மஃரிப் தொழுகைக்கு பின் மன்னு சல்வா ரெஸ்டாரெண்டில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. வட்டியில்லா கடன் திட்டம், நிவாவின் உறுப்பினர்கள் பயன் பெறும் வகையிலான கல்வி –வேலைவாய்ப்பு வழிகாட்டி குழு மற்றும் தாயக ஆலோசனை குழு அறிமுகம், கேள்வி பதில் பகுதி மற்றும் தாயக செய்திகள் என முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோ. A.G.கமால், ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : மெளலவி வாரிஸ், உறுப்பினர்
வரவேற்புரை : சகோ.,சாதிக் அலி  உறுப்பினர்
வரவு - செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான்,பொருளாளர்
இஸ்லாமிய சிறப்புரை :  
               ”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்                  பொறியாளர். முஹமது ஃபெரோஸ்கான், செயலாளர்
குழு அறிமுகம் : சகோ. ஹாஜா சாதிக், மக்கள் தொடர்பாளர்
கேள்வி பதில் நிகழ்ச்சி
நன்றியுரை : சகோ. சிராஜுதீன், ஆலோசனை குழு உறுப்பினர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. முஹமது மன்சூர், தலைவர்

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குளிர் காலமாக இருப்பதால் நிகழ்வை சீக்கிரம் முடிப்பதற்கு வசதியாக அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்துக்கு வருமாறு கேட்டு கொள்கிறோம். அனைவரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

Tuesday, September 20, 2011

September 16 NIWA meeting with Burning Topic





ரமலான் நோன்புக்கு பிறகு நமதூரின் சங்க கூட்டம் நடைபெற இருந்ததால் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற முன்னமேயே வந்து மன்னு ஸல்வா ஹோட்டலில் ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாய் மெளலவி வாரிஸ் அவர்கள் அழகிய குரலில் முஃமினூன் வசனத்தின் முஸ்லீம்களின் பண்புகளை கூறும் வசனங்களை ஓதி ஆரம்பித்தார். தாயகத்திலிருந்து விடுப்பு முடிந்து திரும்பிய களைப்பு மாறாமலேயே நிவாவின் ஆலோசனை குழு உறுப்பினர் நாசர் கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்றார்.

பின்பு நிகழ்ச்சியின் ஹைலெட்டான மார்க்க சொற்பொழிவு நடைபெற இருந்தது. ‘ரமலானுக்கு பின்னும் எனும் தலைப்பில் பேசுவதாக இருந்த நிவாவின் செயலாளர் பொறியாளர் முஹமது ஃபெரோஸ்கான் சில சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடே பரபரப்பாய் பேசி கொண்டிருக்கும் தூக்கு தண்டனை பற்றிய இஸ்லாமிய பார்வை எனும் தலைப்பில் பேசினார். ஆரம்பத்திலேயே தொழுகை, நோன்பு, ஹஜ் மட்டும் மார்க்கம் அல்ல, ஒரு முஸ்லீமின் அடுப்பறை முதல் அரசியல் வரை, கருவறை முதல் கல்லறை வரை அனைத்தும் மார்க்கம் தான், அனைத்திற்கும் மார்க்கத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது, எனவே இதுவும் மார்க்க சொற்பொழிவே என்று தெளிவுபடுத்தி தன்னுரையை ஆரம்பித்தார்.

ராஜீவ்காந்தி கொலையின் சாரம்சத்தை எடுத்துரைத்து இன்று சீமான் முதல் வைகோ வரை தூக்கு தண்டனையை எதிர்ப்பதையும் சில முஸ்லீம் தலைவர்களும் தூக்கு தண்டனையே கூடாது என்று சொல்வதையும் கோடிட்டு காட்டிய ஃபெரோஸ்கான் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராடுபவர்கள் அப்சல் குரு விஷயத்தில் மெளனம் சாதிப்பதையும் காத்தான்குடி மஸ்ஜிதில் ஸஜ்தாவில் இருந்த முஸ்லீம்களை காக்கை குருவி போல் சுட்டு தள்ளிய போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்ததையும் தோலுரித்து காட்டினார்.

அப்சல் குரு எப்படி ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு பின்  இந்திய அரசிடம் சரணடைந்தார் என்பதையும் மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ராணுவத்தின் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதையும் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் நெகிழ்ந்தது

சந்தடி சாக்கில்கொலைக்களமாகும் சிறைச்சாலைகள்எனும் தலைப்பில்கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்எனும் காட்டு மிராண்டி சட்டம் என்று ஆனந்த விகடனில் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தை வம்புக்கிழுத்ததை விமர்சித்த  பொறியாளர் இஸ்லாத்தின் சட்டங்கள் சரியானவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

குஜராத் கலவரத்தில் கவுசர் பீபியின் வயிற்றில் இருந்த குழந்தை உள்ளிட்ட 3000 முஸ்லீம்களை நரபலியாடிய மோடி, சூரத்தில் முஸ்லீம் சகோதரிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த சங் கும்பல், பாபர் மசூதி இடிப்புக்கு பின் மும்பையில் முஸ்லீம்களை வேட்டையாடிய சேனாக்கள், நெல்லி, பாகல்பூர், பீவண்டி என தொடர்ச்சியாக முஸ்லீம்களை கருவருத்த கும்பல்களும், தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ஷே, பலஸ்தீனம், ஆப்கன், சொசோவா, செசன்யா என முஸ்லீம்களை கொன்றொழித்த ஆதிக்கவாதிகள் தூக்கிலேற்றப்பட தகுதியானவர்களே என்று ஆவேசப்பட்டார்.

தூக்கு தண்டனை சரியே என்ற போதிலும் ராஜீவ் காந்தி படுகொலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் தூக்கிலிடப்பட கூடாது என்றவர் அதற்கு ஆதாரமாய் பாதிக்கப்பட்ட சோனியாவே அவரை மன்னித்து விட்டார் என்றும் இவ்வழக்கு இன்னும் முழுமையாய் முடியவில்லை என்றும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரின் பங்கு விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் நிலைநாட்டப்பட்ட இடத்தில் தான் அமுல்படுத்த வேண்டும் என்றார். மனிதர்களின் மனோ இச்சையில் உருவான சட்டங்களை கொண்டு வழங்கப்படும் தீர்ப்புகள் முழுமையானவை அல்ல என்பதற்கு ஆதாரமாய் பாபர் மசூதி வழக்கையும் தேசத்தின் மனசாட்சியை திருப்திபடுத்த எவ்வித ஆதாரமும் இல்லாமல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவையும் சுட்டி காட்டினார்.

பின் சங்கத்தின் வரவு செலவை தாக்கல் செய்த நிவாவின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் இம்மாதம் வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிக்கு வழங்கப்படும் தொகையை வழங்கி பின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். பின் ஊரில் பித்ரா வழங்கிய விபரத்தையும் அறிவித்தார். சந்தா செலுத்தாதவர்கள் தங்கள் சந்தாக்களை முறையாக செலுத்துமாறும் கேட்டு கொண்டார்.

பின்பு ஊரில் பித்ராவை தமுமுகவோடு விநியோகம் செய்தது தொடர்பாகவும் பிற சந்தேகங்களுக்கும் செயலாளர் ஃபெரோஸ்கான் பதிலளித்தார். நன்மையான விஷயங்களில் அனைவருடனும் ஒத்துழைக்க வேண்டும் எனும் அடிப்படையிலும் வெளிநாடுகளில் இருக்கும் நிசா, நெல்மா, நிவா உள்ளிட்ட அனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றாய் இருக்க இது ஓர் படிக்கல்லாய் அமையலாம் என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் சகோதரர்கள் விருப்பப்பட்டால் குர்பானி ஹஜ் பெருநாளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஃபெரோஸ்கான் கூறினார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அச்சமயம் கல்வி, வேலைவாய்ப்பு, மார்க்கம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிவாவின் மக்கள் தொடர்பாளர் ஹாஜா சாதிக் நிகழ்ச்சிக்கு வந்த அனைவர்க்கும் நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த சகோதரருக்கும் நன்றி கூறினார். நிவாவின் துணை செயலாளர் சபீர் அவர்கள் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவும் அனைவருக்கும் மன்னு ஸல்வாவில் சுவையாக பரிமாறப்பட்டது.