Friday, February 18, 2011

04.02.2011 - நிவாவின் உதயம்

குவைத்தில் பல தசாப்தங்களாக நெல்லிக்குப்பம் பகுதி முஸ்லீம்கள் வாழந்து வந்தாலும் வளைகுடாவின் பிற நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவற்றில் உள்ளது போன்று அமைப்பு ரீதியாக ஒருங்கிணைப்பு இல்லாது இருந்தனர். தனிப்பட்ட நபர்கள் சில போது பங்களிப்பு செய்தாலும் நெல்லிக்குப்பத்துக்கு முக்கிய பங்களிப்பு ஏதும் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் பலர் குறைந்த ஊதியத்தில் பணி புரிகின்றனர். சிறு சிறு தேவைகளுக்கும், விசா பிரச்னை, மருத்துவ பிரச்னை போன்றவற்றிக்கு கடனுக்கு கஷ்டப்படுவதும் சில போது இஸ்லாம் ஹராமாக்கியுள்ள வட்டியை நாட வேண்டிய நிலைக்கு உள்ளதையும் உணர்ந்து இவற்றை களைவதின் பொருட்டு நெல்லிக்குப்பம் சகோதரர்கள் ஒன்றிணைய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தோம்.


எனவே தெரிந்த நெல்லிக்குப்பம் வாசிகளுக்கு அழைப்பு கொடுத்து அனைவரையும் பிப்ரவரி 4,2011 அன்று மிர்காபில் உள்ள சூக் சபாத் பில்டிங்கில் கூட செய்தோம். சகோதரர்கள் பலரும் இதற்காக கடுமையாக உழைத்தனர். 04.02.2011 அன்று சரியாக மஃரிப் தொழுகைக்கு பிறகு 6.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. பிப்ரவரியில் நிலவிய கடும் குளிரால் மக்கள் வருவார்களா எனும் பயம் இருந்தது. ஆனால் அப்பயத்தை போக்கி அல்ஹம்துலில்லாஹ் 48 நபர்கள் அக்குளிரிலும் வந்தனர்.
முதலாவதாக சுல்தான் பேட்டையை சார்ந்த சகோ. ஜமீல் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு வந்திருந்த மக்களிடையே சகோ. ஃபெரோஸ்கான் நமதூரின் இப்போதைய பிரச்னைகளை பட்டியலிட்டார். இவற்றிக்கு தீர்வு கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதே என்பதை குரான் வசனங்கள் – ஹதீஸ்கள் ஆதாரத்துடன் அழகுற எடுத்துரைத்தார். மேலும் இதற்காக நாம் ஒன்றிணைந்து ஜமாத்தாக பாடுபட வேண்டும் என்றும் நாளை ஊரில் அமைய உள்ள ஐக்கிய மஜ்லிஸீக்கு நம் ஒத்துழைப்பை வழங்கி நகரின் வளர்ச்சிக்கு பாடுபடலாம் என்றும் கூறினார். சகோதரர்கள் மன்சூர், சாதிக், ஜுல்பிகார், ஹலீல், சபீர் மற்றும் பல சகோதரர்கள் மேலும் ஆக்கபூர்வமான கருத்துகளை கூறினர்.
சகோதரர்கள் அனைவரும் மாதம் 1 தினார் சந்தா கொடுப்பது என்றும் அதை கொண்டு குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் சகோதரர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சில காலம் கழித்து பொருளாதாரம் மேம்பட்டவுடன் இன்ஷா அல்லாஹ் ஊரின் முன்னேற்றத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பைத்துல் மால் உள்ளிட்ட பிற திட்டங்கள் அடுத்த மாத கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சவூதியில் உள்ள நிஸா, துபையில் உள்ள நெல்மா உள்ளிட்ட பிற சங்கங்களுடன் இணைந்து மத்திய கிழக்கில் வலுவான கூட்டமைப்பை ஏற்படுத்தி நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று சூளுரைக்கப்பட்டது.
முதற்கட்டமாக கீழ்கண்ட நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற நிர்வாகிகள் அடுத்த மாத மீட்டிங்கில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. தலைவராக சின்ன தெருவை சார்ந்த சகோதரர் மன்சூர் அவர்களும் வ.உ.சி. நகரை சார்ந்த சாகுல் ஹமீது துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுல்தான்பேட்டையை சார்ந்த பொறியாளர் ஃபெரோஸ்கான் செயலாளராகவும் துணை செயலாளராக மெளலவி அப்துல் ரஹ்மான் தெருவை சார்ந்த சபீர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக முஸ்லீம் புது தெருவை சார்ந்த சகோதரர் ஹலீல் ரஹ்மானும் மக்கள் தொடர்பு அதிகாரியாக பாப்பையம்மாள் தெருவை சார்ந்த சகோதரர் லால் கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..