Tuesday, September 20, 2011

September 16 NIWA meeting with Burning Topic





ரமலான் நோன்புக்கு பிறகு நமதூரின் சங்க கூட்டம் நடைபெற இருந்ததால் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற முன்னமேயே வந்து மன்னு ஸல்வா ஹோட்டலில் ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாய் மெளலவி வாரிஸ் அவர்கள் அழகிய குரலில் முஃமினூன் வசனத்தின் முஸ்லீம்களின் பண்புகளை கூறும் வசனங்களை ஓதி ஆரம்பித்தார். தாயகத்திலிருந்து விடுப்பு முடிந்து திரும்பிய களைப்பு மாறாமலேயே நிவாவின் ஆலோசனை குழு உறுப்பினர் நாசர் கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்றார்.

பின்பு நிகழ்ச்சியின் ஹைலெட்டான மார்க்க சொற்பொழிவு நடைபெற இருந்தது. ‘ரமலானுக்கு பின்னும் எனும் தலைப்பில் பேசுவதாக இருந்த நிவாவின் செயலாளர் பொறியாளர் முஹமது ஃபெரோஸ்கான் சில சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடே பரபரப்பாய் பேசி கொண்டிருக்கும் தூக்கு தண்டனை பற்றிய இஸ்லாமிய பார்வை எனும் தலைப்பில் பேசினார். ஆரம்பத்திலேயே தொழுகை, நோன்பு, ஹஜ் மட்டும் மார்க்கம் அல்ல, ஒரு முஸ்லீமின் அடுப்பறை முதல் அரசியல் வரை, கருவறை முதல் கல்லறை வரை அனைத்தும் மார்க்கம் தான், அனைத்திற்கும் மார்க்கத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது, எனவே இதுவும் மார்க்க சொற்பொழிவே என்று தெளிவுபடுத்தி தன்னுரையை ஆரம்பித்தார்.

ராஜீவ்காந்தி கொலையின் சாரம்சத்தை எடுத்துரைத்து இன்று சீமான் முதல் வைகோ வரை தூக்கு தண்டனையை எதிர்ப்பதையும் சில முஸ்லீம் தலைவர்களும் தூக்கு தண்டனையே கூடாது என்று சொல்வதையும் கோடிட்டு காட்டிய ஃபெரோஸ்கான் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராடுபவர்கள் அப்சல் குரு விஷயத்தில் மெளனம் சாதிப்பதையும் காத்தான்குடி மஸ்ஜிதில் ஸஜ்தாவில் இருந்த முஸ்லீம்களை காக்கை குருவி போல் சுட்டு தள்ளிய போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்ததையும் தோலுரித்து காட்டினார்.

அப்சல் குரு எப்படி ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு பின்  இந்திய அரசிடம் சரணடைந்தார் என்பதையும் மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ராணுவத்தின் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதையும் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் நெகிழ்ந்தது

சந்தடி சாக்கில்கொலைக்களமாகும் சிறைச்சாலைகள்எனும் தலைப்பில்கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்எனும் காட்டு மிராண்டி சட்டம் என்று ஆனந்த விகடனில் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தை வம்புக்கிழுத்ததை விமர்சித்த  பொறியாளர் இஸ்லாத்தின் சட்டங்கள் சரியானவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

குஜராத் கலவரத்தில் கவுசர் பீபியின் வயிற்றில் இருந்த குழந்தை உள்ளிட்ட 3000 முஸ்லீம்களை நரபலியாடிய மோடி, சூரத்தில் முஸ்லீம் சகோதரிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த சங் கும்பல், பாபர் மசூதி இடிப்புக்கு பின் மும்பையில் முஸ்லீம்களை வேட்டையாடிய சேனாக்கள், நெல்லி, பாகல்பூர், பீவண்டி என தொடர்ச்சியாக முஸ்லீம்களை கருவருத்த கும்பல்களும், தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ஷே, பலஸ்தீனம், ஆப்கன், சொசோவா, செசன்யா என முஸ்லீம்களை கொன்றொழித்த ஆதிக்கவாதிகள் தூக்கிலேற்றப்பட தகுதியானவர்களே என்று ஆவேசப்பட்டார்.

தூக்கு தண்டனை சரியே என்ற போதிலும் ராஜீவ் காந்தி படுகொலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் தூக்கிலிடப்பட கூடாது என்றவர் அதற்கு ஆதாரமாய் பாதிக்கப்பட்ட சோனியாவே அவரை மன்னித்து விட்டார் என்றும் இவ்வழக்கு இன்னும் முழுமையாய் முடியவில்லை என்றும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரின் பங்கு விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் நிலைநாட்டப்பட்ட இடத்தில் தான் அமுல்படுத்த வேண்டும் என்றார். மனிதர்களின் மனோ இச்சையில் உருவான சட்டங்களை கொண்டு வழங்கப்படும் தீர்ப்புகள் முழுமையானவை அல்ல என்பதற்கு ஆதாரமாய் பாபர் மசூதி வழக்கையும் தேசத்தின் மனசாட்சியை திருப்திபடுத்த எவ்வித ஆதாரமும் இல்லாமல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவையும் சுட்டி காட்டினார்.

பின் சங்கத்தின் வரவு செலவை தாக்கல் செய்த நிவாவின் பொருளாளர் ஹலீல் ரஹ்மான் இம்மாதம் வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிக்கு வழங்கப்படும் தொகையை வழங்கி பின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். பின் ஊரில் பித்ரா வழங்கிய விபரத்தையும் அறிவித்தார். சந்தா செலுத்தாதவர்கள் தங்கள் சந்தாக்களை முறையாக செலுத்துமாறும் கேட்டு கொண்டார்.

பின்பு ஊரில் பித்ராவை தமுமுகவோடு விநியோகம் செய்தது தொடர்பாகவும் பிற சந்தேகங்களுக்கும் செயலாளர் ஃபெரோஸ்கான் பதிலளித்தார். நன்மையான விஷயங்களில் அனைவருடனும் ஒத்துழைக்க வேண்டும் எனும் அடிப்படையிலும் வெளிநாடுகளில் இருக்கும் நிசா, நெல்மா, நிவா உள்ளிட்ட அனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றாய் இருக்க இது ஓர் படிக்கல்லாய் அமையலாம் என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் சகோதரர்கள் விருப்பப்பட்டால் குர்பானி ஹஜ் பெருநாளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஃபெரோஸ்கான் கூறினார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அச்சமயம் கல்வி, வேலைவாய்ப்பு, மார்க்கம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிவாவின் மக்கள் தொடர்பாளர் ஹாஜா சாதிக் நிகழ்ச்சிக்கு வந்த அனைவர்க்கும் நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த சகோதரருக்கும் நன்றி கூறினார். நிவாவின் துணை செயலாளர் சபீர் அவர்கள் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவும் அனைவருக்கும் மன்னு ஸல்வாவில் சுவையாக பரிமாறப்பட்டது.