Monday, February 6, 2012

சிறப்பாய் நடைபெற்ற நிவாவின் ஓராண்டு சிறப்பு நிகழ்ச்சி


மிர்காப் : குவைத்தில் வாழும் நெல்லிக்குப்பம் மக்களை ஒருமுகப்படுத்தி அவ்வொற்றுமையின் வாழும் குவைத்தில் வாழும் சகோதரர்களுக்கும் நமதூருக்கும் சேவை செய்ய தொடங்கப்பட்ட நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம் (NIWA) தொடங்கி ஓராண்டு நிறைவு அடைவதை ஒட்டி தன்னுடைய முதலாம் ஆண்டு நிறைவின் சிறப்பு விழாவை குவைத் சிட்டியில் உள்ள மன்னு ஸல்வா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

எவ்வருடமும் இல்லா அளவு கடும் குளிர் குவைத்தை வாட்டி வதைக்கும் நிலையிலும், இரு நாட்கள் விடுமுறை என்பதால் எண்ணற்ற அமைப்புகள் நிகழ்ச்சிகளை வைத்திருப்பதாலும் நிவாவின் நிகழ்ச்சிக்கு வரும் சகோதரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவார்களா என்ற கேள்விக்குறிகளை ஆச்சரியமாக்கும் வகையில் மஃரிப் தொழுகை முடிந்த உடன் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியை தொகுத்தளித்த நிவாவின் செயலாளர் பொறியாளர். ஃபெரோஸ்கான் முதலில் நிவாவின் உறுப்பினர் மெளலவி வாரிஸ் அவர்கள் கிராஅத் ஓத அழைக்க, அவரும் சிறப்பாக குரானின் வசனங்களை அழகிய குரலில் வாசித்தார். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்ட சகோ. அப்துல் முஸவ்விர் “ இஸ்லாத்தின் பார்வையில் சமூக சேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
குவைத்தில் அரசு உதவியுடன் செயல்படும் IPC எனப்படும் இஸ்லாமிய பிராசார குழு மாற்று மத சகோதரர்கள் மத்தியில் அழைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அக்குழுவின் சார்பாய் பல்வேறு மொழிகளில் மாத இதழ்கள் வெளி வருகின்றன. தமிழில் வெளியாகும் வசந்தம் எனும் மாத இதழின் ஆசிரியராக இருக்கும் சகோ. அப்துல் முஸவ்விர் சரியான நேரத்துக்கு வந்ததோடு சமூக சேவைகள் என்பதே இன்று ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக செய்யும் வேதனையான சூழலை குறிப்பிட்டு இதற்கு மாற்றமாக இஸ்லாமிய வாதிகள் இறை திருப்தியை மட்டும் நாடி சமூக சேவைகளை செய்தால் அதன் ஊடாகவே கூட மனித உள்ளங்களை கொள்ளை கொள்ள முடியும் என்று அழகாய் சமூக சேவைகளும் இபாதத்தே என்று கூறினார்.


சிறப்பு விருந்தினரின் உரைக்கு பின் உரையாற்ற வந்த நிவாவின் செயலாளரும் IGC அழைப்பாளருமான பொறியாளர் ஃபெரோஸ்கான் “நிவா கடந்து வந்த பாதையும் இன்ஷா அல்லாஹ் இனி கடக்க இருப்பதும்” எனும் தலைப்பில் நிவாவின் செயல்பாடுகளை விவரித்து கூறினார். குறிப்பாக நமதூர் சகோதரர்கள் சிறு தேவைகளுக்கும் வட்டியின் பக்கம் செல்வதை தடுக்கும் விதமாக இது வரை 12 நபர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கப்பட்டுள்ளதையும், நெல்லிக்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரனம் வழங்கியதையும், மருத்துவ உதவி வழங்கியதையும் சுட்டி காட்டினார்.

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நமதூருக்கும் சேவை செய்யும் விதமாக ஆலிமா படிக்க ஆசைப்படும் பெண்களுக்கு உதவி செய்தல், கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் நமதூரில் பைத்துஜ்ஜகாத் மற்றும் மாதிரி இஸ்லாமிய கல்விகூடம் எனும் நீண்ட கால இலக்கை நோக்கி நிவா செயல்படும் என்றும் உறுதியளித்தார். நம்மை போல் பிற வெளிநாடுகளில் இயங்கும் நமதூர் குழுக்களுடன் பேசி ஒருமித்து செயல்பட ஆலோசிக்கப்படும் என்றும் நிவாவின் நெல்லிக்குப்பம் நிர்வாகிகள் விரைவில் விரிவுபடுத்தப்படுவர் என்றும் கூறினார். இறைவன் நாடினால் அடுத்த ஒரு சில மாதங்களில் நிவாவின் அறிமுக விழா நெல்லிக்குப்பத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அடுத்து நிவாவின் பொருளாளர் சகோ. ஹலீல் ரஹ்மான் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த பிறகு இன்னொரு சிறப்பு அழைப்பாளரான பெருவநலநல்லூர் முஸ்லீம் ஜமாத்தின் தலைவரும் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைவருமான இக்பால் அவர்கள் நிவாவின் சமூக சேவைகளை பாராட்டி பேசினார். இக்லாஸுடன் செயல்பட்டால் நமது பணிகளை இறைவன் எளிதாக்கி தருவான் எனும் நம்பிக்கை வார்த்தைகளை மொழிந்தார்.
 அடுத்து அனைவரும் எதிர்பார்த்த நிவாவின் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. வினாடி வினா நிகழ்ச்சிக்கு முன் வந்த சகோதரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு 9 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒவ்வொரு குழுவாய் வெளியேற இறுதியாக எட்டாவது சுற்று முடிவில் குழுக்கள் தரம் பிரிக்கபட்டன. 

முதல் பரிசு வென்ற குழுவில் உள்ள ஐவருக்கும் டிஜிட்டல் கடிகாரங்களை தலைவர் மன்சூர் அவர்கள் வழங்க, இரண்டாம் பரிசாக எமர்ஜென்ஸி லைட்டுகளை செயலாளர் பெரோஸ்கான் அவர்களும், மூன்றாம் பரிசாக ட்ராவல் மக்குகளை பொருளாளர் ஹலீல் ரஹ்மான் அவர்களும் நான்காம் பரிசாக சிடி பவுச்சுகளை ஆலோசனை குழு உறுப்பினர் பஷீர் அவர்களும் மற்ற குழுக்களுக்கு ஆறுதல் பரிசுகளை நிவாவின் நிர்வாகிகளும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நம் சங்கத்தின் ஆதரவாளர்களான நெல்லை அப்துல் ஹமீதும் திருச்சி ஷாஹுலும் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர். நிறைவாக நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜும்மா, பரிசளிப்பு நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த ஆலோசனை குழு உறுப்பினர் கமால், நிகழ்ச்சியை சிறப்பாய் ஏற்பாடு செய்த நிவாவின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சிக்கு வந்த உறுப்பினர்கள் என அனைவருக்கும் எல்லாவற்றிக்கும் மேலாக இந்நிகழ்ச்சியை சிறப்பான ஒன்றாக ஆக்கிய வல்ல இறைவனுக்கும் சகோ. பெரோஸ்கான் நன்றி கூற இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வுக்கு பிறகு செவிக்கு உணவுண்ட சகோதரர்களுக்கு சுவையான உணவு வயிற்றுக்கும் ஈயப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். எங்களின் பணிகளை உன் திருப்தி நாடியே செய்யும் பாக்கியத்தை தருவாயாக. எங்களின் பணிகளை ஏற்று கொள்வாயாக.
இன்ஷா அல்லாஹ் நிவாவின் நிகழ்ச்சிகள் வீடியோவாக வருங்காலங்களில் q8tamil.wordpress.com எனும் தளத்தில் காணலாம்.