Thursday, March 10, 2011

நிவாவின் அறிமுக விழா - இருளின் ஊடே ஒரு நம்பிக்கை நட்சத்திரம்



பிப்ரவரி 4, 2011ல் ஆரம்பிக்கப்பட்ட நிவா அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி தன் அறிமுக விழாவை மார்ச் 4, 2011ல் மிர்காபில் உள்ள தஞ்சை ரெஸ்டாரெண்ட் மாடியில்  நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் 86 நபர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பலருக்கும் நம்மூர் நபர்கள் குவைத்தில் இத்துணை உள்ளதையே அன்று தான் தெரிந்து கொண்டனர் என்றால் அது மிகையானதல்ல.

நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்ய முன்வந்த பின் தாவூத் கார்கோ நிறுவன உரிமையாளர்களும் ஆலோசனை குழு உறுப்பினரான சகோ. கமால் அவர்கள் தலைமை தாங்க நிகழ்ச்சி தொகுப்பாளரான நிவாவின் துணை தலைவர் சகோ. பாபு நிகழ்ச்சியை தொடங்கினார். தொடக்கமாக நிவாவின் துணை செயலாளர் சகோ. ஜுல்பிகார் இறை மறையின் இனிய வசனங்களை ஓத, அதை அழகு தமிழில் மொழிபெயர்த்தார் சகோ. ஜமீல்.



நிவாவின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. அஷ்ரப் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். அதனை தொடர்ந்து நிவாவின் தலைவர் சகோ. மன்சூர் அவர்கள் நிவா ஏன் ? எப்படி? என்ற தலைப்பில் குவைத்தில் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் குறைந்த வருமானத்தில் கஷ்டப்படுவதையும், சிறிய விஷயத்துக்கு எல்லாம் வட்டிக்கு போவதையும் தடுக்கவே என்று அறிமுக உரையில் கூறினார்.


அடுத்து “மீண்டும் ஒரு மதீனா” எனும் தலைப்பில் நிவாவின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் இஸ்லாமிய சிறப்புரையாற்றினார். எப்படி நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமூகம் இருந்தது என்பதை உமர் (ரலி) வாழ்விலிருந்து எடுத்து காட்டினார். உமர் ரலியின் பயம், தக்வா, ரோஷம், போன்றவற்றை சொல்லி சொர்க்கத்துக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டும் இறுதி வேளையில் முனாபிகின்கள் பட்டியலில் தன் பெயர் உள்ளதோ என்று பயந்ததை கூறியது அனைவரையும் நெகிழ செய்தது.

மேலும் எல்லா சூழ்நிலையிலும் ஓரே மாதிரி செயல்பட்ட காலீத் பின் வலீத், சுவனம் காண ஆசைப்படும் அளவு எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவிய அம்மார் (ரலி) போன்ற ஸஹாபாக்களின் வாழ்விலிருந்து மேற்கோள் காட்டி மீண்டும் அது போன்ற மாற்றம் எல்லா மஹல்லாவிலும் ஏற்பட வேண்டும் என்றார். மேலும் பொறியாளர் ஃபெரோஸ்கான் கூறும் போது நெல்லிக்குப்பத்தை முன்மாதிரி நகரமாக மாற்ற நாம் எல்லோரும் முயல வேண்டும் என்றும் அதற்கு நமதூரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைய வேண்டும் என்றும் கூறினார். அப்படி பள்ளி அமைந்தால் நம் சந்ததியர் ஏ பார் ஆப்பிள் என சொல்லாமல் ஏ பார் அல்லாஹ் என்று கூறும், நம் சந்ததியர் நம்மை விட சிறந்த சமூகமாக அமையும் என்று கூறிய போது அனைவரும் இன்ஷா அல்லாஹ் என்று கூறியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

மேலும் நமதூரில் பைத்துல் மால் ஏற்பட்டு அனைவரிடமும் முறையாக ஜகாத்தை வசூலித்து தகுதியானவர்களிடம் கொடுத்தால் 25 வருடங்களில் ஏழ்மையை ஒழித்து விடலாம் என்றும் கூறியது யோசிக்க வைத்தது. அடுத்து நிவாவின் உடனடி திட்டங்களையும் எதிர்கால திட்டங்களையும் பகுதி பொறுப்பாளர்கள் சகோ. அப்துல் ரஹ்மான்,  சகோ. லியாகத் அலி, சகோ.உஸ்மான், மக்கள் தொடர்பாளர் லால் கான் போன்றோர் விளக்கி கூறினர்.

பின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. பக்ருதீன் குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ள பொது மன்னிப்பு (Amnesty) அறிக்கையை வாசித்து பயன் பெற வேண்டினார். பின் இன்னொரு ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. அலாவுதீன் நெல்லிக்குப்பம் ஐக்கிய மஜ்லிஸிடமிருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்டினார். பின்னர் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் ஃபெரோஸ்கான் நிவாவின் இணையதளத்தை அறிமுகம் செய்து அதில் இனி நெல்லிக்குப்பத்தின் அனைத்து செய்திகளும் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிவாவின் பிரதிநிதிகளாக நெல்லிக்குப்பத்தில் சகோ. அஷ்ரப் அலி, சிராஜ் மற்றும் ஹுசைன் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் கூறி அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஒரு முறை படித்தார்
.
உடனடி திட்டங்கள்
.
1.   பைத்துல் மால் – வட்டியில்லா கடன் திட்டம்
குவைத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சகோதரர்கள் பலர் மிக குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் சிறு பிரச்னைக்கும் வட்டியை நோக்கி செல்கின்றனர். இந்நிலையை மாற்ற வட்டியில்லா கடன் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக நிர்வாக குழுவில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை குழு உறுப்பினர்களும் பயன் பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் அக்காமா (விசா) அடிக்க முடியா சூழல் இருந்தால் சங்கத்தில் இருந்து கடன் வாங்கலாம். அது போல் அவர்களின் ஊரில் உள்ள குடும்பத்தாரின் (தாய், தந்தை, தங்கை போன்ற உறவுகள்) மருத்துவ மற்றும் திருமண விஷயங்களுக்கு உதவி பெறலாம்). அதிகபட்சமாக 150 குவைத் திர்ஹம் வரை கடன் வழங்கப்படும். அவர்களுக்கு 2 நபர்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடன் தேவைப்படுவோர் விண்ணப்பம் எழுதி பகுதி நிர்வாகி மூலமாக அல்லது நேரடியாக நிர்வாக குழுவில் உள்ளோரிடம் கொடுக்க வேண்டும். விண்ணப்பதில் 2 ஜாமீன் தாரர்களின் கையெழுத்து இடம் பெற வேண்டும். பின் நிர்வாக குழு பரீசிலித்து கடன் கொடுக்கும். கடன் கொடுத்த அடுத்த மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் 25 குவைத் திர்ஹம் வீதம் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் லைசென்ஸ்க்குகாக விண்ணப்பிப்போரின் நிலையை அலசி case by case study ஆக முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் ஜூன் மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.

2.   மரணமடைந்தோருக்கு உதவி தொகை

குவைத்தில் பணியாற்றும் நெல்லிக்குப்பம் சகோதரர்கள் யாரேனும் குவைத்தில் விபத்திலோ அல்லது சாதாரணமாகவோ மரணித்து விட்டால் யாராக இருந்தாலும் அவர்களுக்காக பொது வசூல் செய்யப்படும். எவ்வளவு தொகை வசூலாகிறதோ அது அக்குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும். வசூலாகும் தொகை 25,000 இந்திய ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பைத்துல்மாலிலிருந்து எடுத்து கொடுக்கப்படும்.

எதிர்கால திட்டங்கள்

1.   நெல்லிக்குப்பம் நகரில் குடிசை வீடுகள் தீப்பிடித்தால் உதவுவது
நமதூரில் உள்ள பெண்கள் ஆலிமா படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான செலவை ஏற்பது.
3.   பித்ரா வசூலித்து விநியோகம் செய்தல்
4.   ஊரில் மருத்துவம் தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தல்
5.   ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மஜ்லிஸ் மூலம் அனைத்து நல திட்டங்களும் stream line செய்யப்பட்டு உரியவர்களுக்கு கொண்டு செல்லல்.
6.   Nisa, Nelma போன்ற வெளிநாட்டு நெல்லிக்குப்பம் அமைப்புகளோடு எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்
7.  ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை அல்லது கடன் வழங்குதல்
8.  அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்தல்
9.  நெல்லிக்குப்பம் நகரில் ஒரு மாதிரி இஸ்லாமிய பள்ளி கூடம் அமைக்க பாடுபடுதல்
10 நெல்லிக்குப்பத்தில் விதவை பெண்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்குதல்

இறுதியாக நிவாவின் பொருளாளர் சகோ. ஹலீல் ரஹ்மான் நன்றி நவில அனைவர்க்கும் சுவையான புலாவ் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று வந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் தங்கள் சந்தாவை அன்றே செலுத்தியது நிவாவின் மேல் உள்ள நம்பிக்கையை பறைசாற்றுகிறது. இருளை கிழித்து வரும் சூரியனின் வருகையை போன்ற இந்நம்பிக்கையை இன்ஷா அல்லாஹ் நிவா காப்பாற்ற துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment